தமிழ்நாட்டு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி – திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) ஒரு வாரத்தில் தொடங்கும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக திருமாவளவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “பீகார் மாநிலத்தில் முன்பு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டன. இலட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டதாக பல ஆதாரப்பூர்வமான புகார்கள் உள்ளன. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :
“சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது தவறு. அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இதற்கெதிராக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. விசிக கட்சியும் இதற்காக வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், பீகாரில் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயக அடித்தளத்தை பாதிக்கிறது.”

அதோடு, “கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், அவர்களுக்கு தெரியாமலேயே நீக்கப்பட்டுள்ளன. இதற்கு பாஜக வேட்பாளர் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் காரணமானது என சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இதுபோன்ற சூழலில் தமிழ்நாட்டிலும் இதே செயல்முறை நடக்கப் போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருமாவளவன் மேலும் வலியுறுத்தியதாவது, “வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக பெயர்களை நீக்கவோ சேர்க்கவோ முடியாது. எனவே, இந்த பிரச்சனைக்கான தீவிரத்தை உணர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version