திருவாரூர் நகராட்சி 30-வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன், இளைஞரை தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக பேனர் வைக்க கவுன்சிலர் புருஷோத்தமன் ஆதரவாளர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதி இளைஞர் கிஷோர் தனது வீட்டின் முன் பேனர் வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, கவுன்சிலர் புருஷோத்தமனும் அவரது ஆதரவாளர்களும் கிஷோரை முற்றுகையிட்டு தாக்கினர். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் விக்னேஷுக்கும் அடி உதை விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துக்கான வீடியோ வெளிவந்ததை அடுத்து, கவுன்சிலர் புருஷோத்தமன் உள்பட 11 பேருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை கண்டித்த அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்,
“தனது வீட்டின் முன் பேனர் வைக்கக் கூடாது எனக் கூறிய இளைஞரை கவுன்சிலரும் அவரது கும்பலும் தாக்கினர். அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை குண்டர்கள் போல நடந்து கொள்வது திமுகவின் அரசியல் கலாசாரம். குண்டர்கள் மற்றும் வன்முறையில் வளர்ந்து வரும் உங்கள் கட்சியின் செயல்பாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்று மன்னிப்பு கேட்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.