துறையூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், அதிமுக நிர்வாகிகள் உள்பட 14 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துறையூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தின் போது, அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், உதவியாளர், கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, துறையூர் நகர அதிமுக செயலாளர் அமைதி பாலு, கவுன்சிலர் தீனதயாளன், 2 பேர் உட்பட 4 அதிமுக நிர்வாகிகள் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேருக்கு எதிராக, 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே சம்பவம் குறித்து, “ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது நடந்த தாக்குதல், எடப்பாடி பழனிசாமி பொறுப்பின்றி பேசியதன் விளைவு” என திமுக எம்.எல்.ஏ எழிலன் குற்றஞ்சாட்டினார். மேலும், உயிர் காக்கும் சேவையில் ஈடுபடும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால், வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, சட்ட நடவடிக்கை குறித்த எச்சரிக்கை பதாகைகள் அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் ஒட்டப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
