ஊர்குளத்தான்பட்டி முனியன் கோயில் படைப்பு விழா 300 காளைகள் சீறிப்பாய்ந்த மஞ்சுவிரட்டில் 13 பேர் காயம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியம் கண்டவராயன்பட்டி அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியில், பிரசித்தி பெற்ற முனியன் கோயில் படைப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மார்கழி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று முனியன் கோயிலில் கிராமத்தினர் படையலிட்டுச் சிறப்பு வழிபாடு நடத்துவது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். இந்த ஆண்டு விழாவினை முன்னிட்டு, நேற்று காலை முனியன் கோயிலில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வழிபாட்டிற்குப் பிறகு, கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக மஞ்சுவிரட்டு பொட்டலுக்கு வந்தடைந்தனர்.

காலை 10:50 மணியளவில் முனியன் கோயில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு, முதலில் அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு உற்சாகமாகத் தொடங்கியது. சிவகங்கை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகள் மற்றும் வேன்களில் கொண்டு வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட துடிப்பான காளைகள் களம் கண்டன. அதிகாரப்பூர்வ அனுமதி பெறப்படாத மஞ்சுவிரட்டு என்பதால், வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்படாமல், திறந்தவெளிப் பொட்டலில் ‘கட்டுமாடுகளாக’ காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் களம் இறங்கினர். காளைகளின் சீற்றத்தில் சிக்கி மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட மொத்தம் 13 பேர் காயமடைந்தனர். அவர்களுக்குப் பொட்டலிலேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காகத் திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிடிபடாத சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வழக்கமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், கிராமப்புறங்களில் பாரம்பரியமாக நடத்தப்படும் இத்தகைய மஞ்சுவிரட்டு நிகழ்வுகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், தங்களது குலதெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கண்டவராயன்பட்டி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version