பீகாரின் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தை கட்டுக்குள் கொண்ட இந்திய அணி, முதல்பாதியில் இரு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இறுதியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியதால், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
இதற்கு முன்பு, காலை நடைபெற்ற முதலாவது போட்டியில் மலேசியா 4-1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்தது. அதேபோல், நடப்பு சாம்பியன் கொரியா 7-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜப்பான் 7-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை எளிதில் தோற்கடித்தது.
தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பீகாரில் நடைபெறும் இந்த ஆசியக் கோப்பை ஹாக்கி தொடருக்கான நுழைவு சீட்டுகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சியால், இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

















