உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர சூழ்நிலையில் பிரசவம் செய்ய உதவிய ராணுவ மருத்துவர் மேஜர் ரோஹித் பச்வாலா பன்முக பாராட்டுகளை பெற்றுள்ளார். அவரது துணிச்சலும், கடமைக்கு அப்பாற்பட்ட சேவையையும் மதித்து, ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜூலை 6 ஆம் தேதி பன்வெல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணிப் பெண், கடுமையான பிரசவ வலியால் அவதியடைந்த நிலையில், உறவினர்கள் அவசரமாக ஜான்சி ரயில்நிலையத்தில் இறக்கினர். இதை பார்த்த ஒரு பெண் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ராணுவ அதிகாரி உடனே உதவிக்கு வந்தனர்.
அந்த நேரத்தில் ரயிலுக்காக காத்திருந்த ராணுவ மருத்துவ பிரிவைச் சேர்ந்த மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா, உடனடியாக செயலில் இறங்கி, மருத்துவ உபகரணங்கள் இல்லாத சூழ்நிலையிலும் ஹேர் கிளிப் மற்றும் பாக்கெட் கத்தியை பயன்படுத்தி சிறப்பாக குழந்தையை பிரசவிக்கச் செய்தார்.
இந்த மனிதநேய செயல் குறித்து பெருமைப்பட்டு, ராணுவ தளபதி உபேந்திரா திவேதி, “மருத்துவர் ரோஹித் பச்வாலா கடமைக்கு அப்பாற்பட்ட அர்ப்பணிப்புடன் செயல் படுத்துள்ளார். இது ராணுவத்தின் உயரிய மதிப்புகளைக் காட்டும் எடுத்துக்காட்டாக உள்ளது,” என பாராட்டினார்.
மேஜர் பச்வாலாவுக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.