ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள முதல் குற்றவாளி நாகேந்திரனுக்கு, கல்லீரல் பாதிப்பு காரணமாக இன்று வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் கூறி, அவரது மனைவி விசாலாட்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் 3 பேர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக காவல்துறை தகவல் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, நாகேந்திரனையும், கல்லீரல் தானம் செய்ய விரும்பும் அவரது குடும்பத்தினரையும், இன்று வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. பரிசோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர்கள் அவசியம் எனத் தெரிவித்தால், நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அவருடன் உதவியாக குடும்பத்தினர் ஒருவர் மட்டும் இருக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், உடன் இருக்கும் குடும்பத்தினர் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த வழக்கின் தொடர்ந்து விசாரணை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.