“அண்ணா பெயரில் கட்சி வைத்துக்கொண்டு எதிர்க்க கூட தயக்கமா ?” – அதிமுகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்ற மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக, கூட்டணிக் கட்சியான அதிமுக மவுனம் காக்கும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

2005ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கிராமப்புற ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் முக்கியமான நலத்திட்டமாக செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு மாற்றாக, ‘விக்சித் பாரத் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டம்’ (VB G RAM G) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவுக்கு கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், அந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு, பாஜக தரப்பில் எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் அதன் நடைமுறை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக குரல் எழுப்பாததை சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதில்,
“MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், புதிய திட்டத்தில் அனைத்து நிபந்தனைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், நிதிப் பங்களிப்பு மட்டும் மாநில அரசுகளின் மீது சுமத்தப்படுவதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பாரா?” என்றும் அவர் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பில் முக்கிய பங்கு வகித்த நூறு நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இவ்வளவு அடக்கமாக மத்திய அரசுக்கு ஆதரவு தரும் கட்சிக்கு ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயர் எதற்கு? இதை நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்,” என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version