சென்னை: வரும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் வேலை, தொழில் நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழக்கம் உள்ளது. இதனால், அந்த நாட்களில் ரயில்களில் பெரும் திரளான பயணிகள் போக்குவரத்து நிலவுவது வழக்கம்.
அத்தகைய பயணிகளுக்காக 60 நாட்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி, வரும் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வியாழக்கிழமையன்று பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், அதற்கான பயண முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவலின் படி
ஜனவரி 11ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும்.
ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை,
ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாள்,
மேலும், ஜனவரி 14ஆம் தேதிக்கான டிக்கெட் அதன் அடுத்த நாளில் தொடங்கும்.
பொங்கல் பண்டிகை முடிந்தபின் ஊரிலிருந்து திரும்ப வரும் பயணிகளுக்காக ஜனவரி 18ஆம் தேதி வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அத்துடன், ஜனவரி 18ஆம் தேதிக்கான முன்பதிவு நவம்பர் 19ஆம் தேதி தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கல் சீசனில் ரயில்களில் டிக்கெட் விற்பனை மிக வேகமாக நடைபெறும் என்பதால், பயணிகள் தங்கள் முன்பதிவுகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















