“போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவு திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளை மறைக்க முயற்சிக்கிறார்களா?” என்று தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “காலையுணவின் தரத்தை உயர்த்தாமல், திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசுப் பள்ளிகளுக்கும் விரிவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
ஆனால், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும், திருவாரூர் பூனாயிருப்பு தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலையுணவில் பல்லி விழுந்திருந்தது. இவை வெறும் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. உண்மையில், காலையுணவில் நடைபெறும் குளறுபடிகளைப் பட்டியலிட்டால் சீனப் பெருஞ்சுவரே போதாது.
பிஞ்சுக் குழந்தைகளுக்காக வழங்கப்படும் காலையுணவில் புழு முதல் பல்லி வரை இருப்பது கவலைக்குரியது. அது விடியா அரசின் விழிகளுக்குப் புலப்படவில்லையா ?
ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவு, நெடுந்தூரத்தில் இருந்து கொண்டு வருவதால் கெட்டுப்போனதாக மாறுகிறது. இதுவே ‘திராவிட மாடல்’ சாதனையா? உணவு என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் வழங்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பவர்கள் ஏழைக் குழந்தைகள் தானே என்ற அலட்சியமா? அல்லது போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவின் குளறுபடிகளை மறைக்க நினைக்கிறார்களா ?” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.