சென்னை : “மாநிலங்களின் வருமானத்தை பாதிக்காமல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் அது மக்களுக்கு சேவையாற்றாது,” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய 5%, 12%, 18% மற்றும் 28% என உள்ள ஜிஎஸ்டி வரி அடுக்குகளை, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளாக குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
“ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் எந்தவொரு வரிக்குறைப்பும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் மாநில உள்கட்டமைப்புக்கு அத்தியாவசியமான வருவாயை பாதிக்கக் கூடாது.
வரிக்குறைப்பின் பலன்கள் ஏழை மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். மத்திய அரசு முன்மொழிந்துள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து, எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் டில்லியில் ஆலோசனை நடத்தினர். அதில், மாநில வருவாய் நலன்களைப் பாதுகாக்கவும், நியாயமான முடிவுகளை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கருத்து வெளியிடப்பட்டது.
இதற்கான ஒருமித்த கருத்து வரைவு விரைவில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.