அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்பியும், அதிமுக அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா, “அதிமுக தற்போது பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது; கட்சியின் கொள்கை பாதை தடம் புரண்டுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.
அண்மையில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்ததைக் கண்டித்து அதிமுகவிலிருந்து விலகிய அவர், இன்று காலை திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா கூறியதாவது :
“பாஜகவுடன் கூட்டணி குறித்து என் மனக்குமுறல்களை அதிமுக உயர்மட்ட குழுவினரிடம் தெரிவித்த போதும், அவர்கள் கவனிக்கவில்லை. என்டிஏ கூட்டணியில் பாஜக முக்கிய பங்கு வகிக்குமென அமித் ஷா கூறுகிறார். ஆனால் அதேவேளை, ‘நாங்கள் ஏமாளிகள் அல்ல’ என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இதுவே கட்சியின் குழப்பமான நிலையை காட்டுகிறது.”
மேலும் அவர் தெரிவித்தார் :
“பாஜக என்பது தமிழ்நாட்டில் எதிர்மறை சித்தாந்தத்தைப் போற்றும் கட்சி. இங்கே மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். தமிழக அரசின் தற்போதைய செயல்திறனைப் பொறுத்தவரை, முதலமைச்சர் ஸ்டாலின் போன்ற தலைவர் அதிமுகவில் இல்லை என்பதே என் கருத்து. அவருடைய நிர்வாகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கிறது.”
“பாஜக தற்போது தேர்தலில் வெற்றியடைவதைவிட, அதிமுகவை அழிப்பதே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. வாஜ்பாய் கால பாஜக, கூட்டணி கட்சிகளை மதித்தது. ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது,” என்றார்.
இந்நிலையில், அன்வர் ராஜா திமுகவில் இணைந்த செய்தி வெளியாகியவுடன், அவரை அதிமுகவில் இருந்து நீக்கும் உத்தரவை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.