பயணிகளை ஏற்றிச் செல்லும் மூன்று வேன்களுக்கு, விதிமுறைகளை மீறி உறுதிச் சான்றிதழ் (Fitness Certificate) அளித்ததன் மூலம் அரசுக்கு ₹3.72 லட்சம் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக, மோட்டார் வாகன ஆய்வாளர் கே. விஜயகுமார் (56) மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஜயகுமார், 2023-ஆம் ஆண்டில் காரைக்குடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் (RTO) மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றினார். தற்போது இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். அக்கால கட்டத்தில், மூன்று தனியார் பயணிகள் வேன்களின் (வண்டி எண்கள்: TN 67 BJ 1729, TN 18 AK 4768, TN 54 S 9055) உரிமையாளர்கள், தங்களின் வாகனங்களுக்கு உறுதிச் சான்று கோரி விண்ணப்பித்தனர். பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன்களில், ஓட்டுநருடன் சேர்த்து அதிகபட்சமாக 13 பயணிகள் மட்டுமே அமரக்கூடிய விதத்தில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பதே விதி. ஆனால், இந்த மூன்று வாகன உரிமையாளர்களும் தங்களது வேன்களில் பேருந்துகளில் இருப்பது போல, ஓட்டுநருடன் சேர்த்து 26 பயணிகள் அமரும் விதத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்திருந்தனர்.இத்தகைய இருக்கை மாற்றங்களைச் செய்வதற்கு, அரசுப் போக்குவரத்துத் துறை ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறத் தவறியிருந்தால், வேன் உரிமையாளர்கள் மீது ₹3.72 லட்சம் வரை அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும். ஆய்வாளர் விஜயகுமார், இந்த விதிமீறல்களைக் கண்டறிந்தும், மூன்று வேன் உரிமையாளர் களிடமிருந்தும் சட்டப்படி வசூலிக்கப்பட வேண்டிய அபராதத் தொகையான ₹3.72 லட்சத்தை வசூலிக்கவில்லை. மாறாக, அனைத்து வேன்களுக்கும் உறுதிச் சான்றிதழ் அளித்து, விதிமுறைகளை மீறிச் செயல்பட்டுள்ளார்.
இந்தச் செயல் மூலம் ஆய்வாளர் விஜயகுமார் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் (DSP) ஜான் பிரிட்டோ மற்றும் ஆய்வாளர் ஜேசுதாஸ் ஆகியோர் ஆய்வாளர் விஜயகுமார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Corruption Act) வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
