திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில், காதல் விவகாரத்தைக் காரணமாகக் கொண்டு, 11ம் வகுப்பு மாணவர் ஒருவரை சிறுமியின் அண்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சேரன்மகாதேவியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன், பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் கூனியூர் பகுதியைச் சேர்ந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு, காலப்போக்கில் காதலாக மாறியதுடன், இருவரும் அடிக்கடி செல்போனில் உரையாடி வந்தனர்.
இந்த உறவு சிறுமியின் 12ம் வகுப்பு படிக்கும் அண்ணனுக்குத் தெரியவந்தபோது, இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவரது கோபம் உச்சத்துக்கு எட்டியது. இதனால், மாணவனை தாக்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டு, செவ்வாய்க்கிழமை அன்று மாணவனின் வீட்டிற்கே சிறுமியின் அண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ஆகிய ஐந்து பேர் சென்றனர்.
வீட்டுக்குள் நுழைந்து, மாணவனை அரிவாளால் வெட்டியதுடன், வீட்டு உபகரணங்களையும் உடைத்து, சூறையாடியுள்ளனர். காயமடைந்த மாணவன் முதலில் சேரன்மகாதேவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து, சேரன்மகாதேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்பேரில், 18 வயதுக்குட்பட்ட ஐந்து பள்ளி மாணவர்களை கைது செய்து, திருநெல்வேலியில் உள்ள கூர்நோக்கு சிறுவர் இல்லத்தில் அடைத்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகத் தோன்றும் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேப்போல் கடந்த மாதம், காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமும் திருநெல்வேலியிலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில், குற்றவாளியாக சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதில், இது சமூக ரீதியான முன்விரோதம் காரணமாக நடந்ததல்ல என்றும், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான முதிர்ச்சி இல்லாத செயல்கள்தான் காரணமாக இருந்தன என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவதை விலக்குமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். இதுவரை இந்த ஆண்டில் மட்டும், சமூக ஊடகங்களின் வழியாக தவறான தகவல்களை பரப்பிய 82 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.