திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் உள்ள பழமையான செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு போலி மதச்சார்பின்மை பேசி மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறித்து வருவதாகவும், அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்திக் கொள்வது அந்த அரசுக்கு நல்லது என்றும் எச்சரித்துள்ளார். புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடையதும், அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டுத் தலமுமான இந்த ஆலயம் இடிக்கப்பட்டது, இந்து மதத்திற்கு எதிரான ஒரு தரங்கெட்ட நடவடிக்கை என அவர் சாடியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பழிவாங்கும் நோக்கோடே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற அனுமதி மறுத்த அரசு, ஈடுபாடாகப் பழமையான கோவில்களை இடிப்பதில் ஆர்வம் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ள கோவில் இடங்களை மீட்க வக்கற்ற அரசு, தலைமுறை தலைமுறையாக மக்கள் வழிபடும் கோவில்களைக் காவல்துறையைக் குவித்து இடிப்பது யாரைத் திருப்திப்படுத்த? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
கோவில் இடிப்பைத் தடுக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது காவல்துறை நடத்திய தாக்குதலையும் அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார். காவல்துறையின் பலப்பிரயோகத்தால் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை திமுக அரசு உணர வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.














