தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பால் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது அரசியல் பணிகளுக்கு அப்பாற்பட்டு, சமூக நலன் மற்றும் இயற்கை விவசாய நலனுக்காக நான் மேற்கொண்டு வரும் பணிகளைப் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. இயற்கை விவசாயம் மீது கொண்டுள்ள ஆர்வத்தால், ‘We the Leaders’ அறக்கட்டளை மூலமாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஜூலை 12ஆம் தேதி நான் விவசாய நிலம் ஒன்றை, என்னுடைய மற்றும் என் மனைவியின் சேமிப்பு மற்றும் கடன் மூலமாக வாங்கியுள்ளேன். அந்த நிலத்தை பதிவு செய்வதற்காக தமிழக அரசுக்கான கட்டணமாக ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம்,” என்றார்.
மேலும், “மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் நான் விண்ணப்பித்துள்ளேன். தற்போது அது பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகளில் இந்த விவரங்கள் பிரதிபலிக்கும். இது தான் நான் வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனம் தொடங்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் என் குடும்பத்துடன் செலவிட நேரமில்லை. தற்போது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், சட்டப்படி வணிக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எப்போதும் நான் நேர்மையும் உண்மையும் கடைப்பிடித்துள்ளேன். எனக்கு எதிராக விமர்சனம் செய்வோரை வாழ்த்துகிறேன். அவர்கள் இனி பயனுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுவார்கள் என நம்புகிறேன்,” என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.