திருவண்ணாமையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகத்திலேயே வெளிமாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். இக்கோவில் பின்புறம் அமைந்துள்ள ‘அண்ணாமலை’ என அழைக்கப்படும் மலையை, பக்தர்கள் இறைவன் சிவனாகவே கருதி வழிபடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த மலையைச் சுற்றி அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில், ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் ஏற்றப்படும் நாளும், சித்ரா பவுர்ணமி நாளும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுவிடுகிறார்கள்.
இந்த ஆண்டின் ஆனி மாத பவுர்ணமி ஜூலை 10-ந் தேதி அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி, ஜூலை 11-ந் தேதி அதிகாலை 3.08 மணிக்கு முடிவடைகிறது. இதற்கிடையில் பக்தர்கள் கிரிவலம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது அதிக வெயில் சூழ்நிலை நிலவுவதால், பக்தர்கள் நண்பகல் நேரத்தை தவிர்த்து அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் செல்ல மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.