கர்னூல் : ஆந்திரா மாநிலத்தில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த சிவசங்கர் என்ற இளைஞரின் விபத்துக்கு முன்பான செயல்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு 41 பேருடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து, கர்னூல் மாவட்டம் சின்ன தெக்கூர் அருகே அதிகாலை 3.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்று திடீரென பேருந்தை மோதி அதன் கீழ் சிக்கியது. அதனைத் தொடர்ந்து, பேருந்தின் எஞ்சின் பகுதியில் தீப்பற்றி கண் இமைக்கும் நேரத்தில் முழு வாகனமும் எரிந்து விட்டது.
பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறியதால் 10-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் தீ வேகமாக பரவியதால் 20 பேர் வரை உள்ளேயே சிக்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை ஆரம்பித்தனர். பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் கர்னூல் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் என அடையாளம் காணப்பட்டார்.
விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் செய்த அதிர்ச்சிகரமான செயல் குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், சிவசங்கர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு வந்து, பெட்ரோல் நிரப்ப முயன்றும் யாரும் இல்லாததால் திரும்பிச் சென்றதாக பதிவாகியுள்ளது.
அந்த காட்சிகளில் சிவசங்கரின் நண்பர் போதையில் தள்ளாடியபடி வாகனத்தை இயக்கியதும், பின்னர் இருவரும் பிரிந்ததும் தெரியவந்துள்ளது. சில நேரத்திலேயே சிவசங்கர் தனியாக சென்று பேருந்துடன் மோதியதில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இப்போது, அவருடன் இருந்த நண்பர் யார்? அவர் எங்கே சென்றார்? என்பதற்கான விசாரணை காவல்துறையினரால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
















