பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) முக்கிய அரசியல் திருப்பமாக, அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்கியதற்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த சில மாதங்களாக பாமக, ராமதாஸ்–அன்புமணி என இரு தரப்பாக செயல்பட்டு வந்த நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
கூட்டத்திற்கு முன் சேலம் வந்த ராமதாஸ், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை பொதுக்குழு தனக்கு வழங்கும் என தெரிவித்திருந்தார். அதன்படி, தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகள் மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அதிகாரங்கள் அனைத்தும் ராமதாஸிடம் ஒப்படைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், அன்புமணி ராமதாஸை பாமகவில் இருந்து நீக்கிய நடவடிக்கையை செயற்குழு மற்றும் பொதுக்குழு அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதேபோல், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்மானங்கள், பாமக அரசியலில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

















