சென்னை:
“உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு எப்படி வெற்றி இது?” என ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அன்புமணி, “தமிழகத்தில் பின்தங்கிய சமூகங்களின் உண்மை நிலையை அறிய ஜாதி வாரி கணக்கெடுப்பு முக்கியம். இது மூலமாகவே கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை ஆகியவையின் தெளிவான தரவுகள் கிடைக்கும்,” என்றார்.
மத்திய அரசு தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனது வெற்றியாக கருதி கொண்டாடுவதை அவர் விமர்சித்தார். “ஆட்சி இருந்தபோது இதை செய்யாதவர்கள் இப்போது எப்படி அதை வெற்றி எனக் கூறுகிறார்கள்?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும், “Caste Census என்பது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் Caste Survey என்பது மாநில அரசின் பொறுப்பு. தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும், சமூகநீதி உறுதிப்படுத்தவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்,” என்றும் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், “எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றால் அது எங்களுக்கு தான் வெற்றி. திமுகவுக்கு எப்படி வெற்றி இது? தெரியாமல் ஆளும் கட்சியினர் உளறிக்கொண்டு இருக்கிறார்கள்,” என கடுமையாக விமர்சித்தார்.