“சுற்றுச்சூழல் பூங்காவா? தனியார் வர்த்தக மையமா?” அதிமுக டாக்டர் சரவணன் ஆவேசம்!

மதுரை மாநகராட்சி அலுவலகமான அண்ணா மாளிகை வளாகத்தில், கடந்த 2004-ஆம் ஆண்டு சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட “சுற்றுச்சூழல் பூங்கா”, இன்று மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், தனியார் ஆதிக்கத்தாலும் தன் அடையாளத்தை இழந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும், அமைதியான சூழலில் யோகாசனப் பயிற்சிகள் செய்வதற்கும் புகலிடமாக விளங்கிய இந்தப் பூங்காவில், கண்ணைக் கவரும் நடனமிடும் நீரூற்றுகள், படகு குழாம் மற்றும் பசுமையான நடைபாதைகள் என மதுரையின் இதயமாகத் திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், பராமரிப்புப் பணிகளைக் காரணம் காட்டி இந்தப் பூங்காவை மூன்று ஆண்டுகளுக்குத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம். இந்த முடிவே தற்போது பூங்காவின் அழிவிற்கும், பொதுமக்களின் போராட்டத்திற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.

பூங்காவைக் கையகப்படுத்தியுள்ள குத்தகைதாரர்கள், அதன் இயற்கை எழிலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வணிக நோக்கில் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. பூங்காவின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாகத் தகரக் கொட்டகைகள் அமைப்பது, ராட்டினங்கள் போன்ற பொழுதுபோக்குச் சாதனங்களை நிறுவுவதற்காகப் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்த புல்வெளிகள், அரிய வகைச் செடிகள் மற்றும் நிழல் தரும் மரங்களை அழித்து வருவது எனப் பூங்காவின் சுற்றுச்சூழலையே சிதைத்து வருகின்றனர். மேலும், நீண்டகாலமாக இந்தப் பூங்காவைப் பயன்படுத்தி வரும் “நடைபயிற்சியாளர் சங்கம்” சார்பில், பழுதடைந்த பகுதிகளைத் தங்களது சொந்தச் செலவிலாவது சீரமைக்க முன்வந்தால், அதற்கும் தனியார் குத்தகைதாரர்கள் முட்டுக்கட்டை போட்டு வருவது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சியாளர் சங்கத்தினர் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணனிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை பூங்காவுக்கு நேரில் சென்ற டாக்டர் சரவணன், அங்கு நடைப்பயிற்சி மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த முதியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களைச் சந்தித்து அவர்களின் வேதனைகளைக் கேட்டறிந்தார். பூங்காவின் சீர்குலைந்த நிலையையும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்த அவர், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அரசு நிலத்தைப் பராமரிப்பு என்ற பெயரில் தனியார் நிறுவனம் நிரந்தரமாகக் கைப்பற்ற முயல்வதாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய நில அபகரிப்பு முயற்சிக்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஒருபோதும் துணை போகக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துப் பேசிய டாக்டர் சரவணன், பூங்காவில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பழுதடைந்துள்ள நடைபாதைகள் மற்றும் நீரூற்றுகளை மாநகராட்சி நிர்வாகமே சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “மக்களின் ஆரோக்கியத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுச்சொத்தைத் தனியார் லாபத்திற்காகத் தாரை வார்ப்பதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறிய அவர், சுற்றுச்சூழல் பூங்காவைப் பாதுகாக்கப் போராடும் நடைபயிற்சியாளர் சங்கத்திற்கு அதிமுக என்றென்றும் பக்கபலமாக இருந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்று உறுதி அளித்தார். மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தத் தனியார்மயமாக்கல் போக்குத் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version