“நடுரோட்டில் நிற்பார் எடப்பாடி.. முதல்வர் வேட்பாளர் என அமித் ஷா சொல்லவே இல்லை” – டிடிவி தினகரன் கடும் தாக்குதல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் விமர்சனங்கள் எழுப்பியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தன்மானம்தான் முக்கியம் என கூறிவிட்டு பழனிசாமி டெல்லி சென்றது ஏன்? அதிமுக தோல்வியடைந்தாலும் அதற்கு நான் காரணம் அல்ல. பழனிசாமியின் செயல்களால்தான் அவர் மற்றும் அதிமுக நடுரோட்டில் நிற்க நேரிடும்,” என்று கூறினார்.

மேலும் அவர், “எடப்பாடி முதல்வர் பதவியை காப்பாற்றியது பாஜகவல்ல, 122 அதிமுக எம்.எல்.ஏக்களின் வாக்குகள்தான். கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவால் தான் அவர் முதல்வரானார். ஆனால் இன்று உண்மையை மறைத்து பேசுகிறார்,” என்று குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில், “அமித் ஷா, அதிமுக தான் ஆட்சி நடத்தும் கட்சி என்றார்; ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருபோதும் கூறவில்லை. இதை பழனிசாமி உணர வேண்டும். பாஜக கூட்டணிக்காக அவர் நன்றியோடு இருந்திருந்தால், 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் எல்லோருக்கும் துரோகம் செய்துவிட்டார்,” என தினகரன் தாக்கி பேசினார்.

Exit mobile version