அதிமுகவை விமர்சிக்கக் கூடாது – பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்


அதிமுக குறித்து பாஜக நிர்வாகிகள் விமர்சிக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பாஜக நிர்வாகிகளிடம், “அதிமுகவையோ அதன் தலைவர்களையோ யாரும் விமர்சிக்க வேண்டாம். அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று அமித்ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் அழைப்பு வழங்கப்படாததால் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், கூட்டணியில் உள்ள கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி நல்லிணக்கமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவுடனான கூட்டணியை முறித்த அதிமுக, தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது.

இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர், என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version