டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

டெல்லி: தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களிடையே நடந்த திடீர் ஆலோசனை கவனம் ஈர்த்துள்ளது. தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்றுமாலை சந்தித்து, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வலுவான அரசியல் திட்டமிடலை பாஜக தேசிய உயர்மட்டம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் பகுதியாக சில நாட்களுக்கு முன்பு, அதிமுக தலைவரான எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக சந்தித்து கூட்டணி அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

எனினும், பாஜக கூட்டணியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் போன்ற முன்னாள் அதிமுக பிரபலங்கள் விலகிச் சென்றது, கட்சிக்குள் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இதனாலேயே, சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு அழைத்து அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு, முக்கிய பதவியின்றி இருப்பதால் அண்ணாமலையில் அதிருப்தி நிலவுவதாக சில வட்டாரங்களில் பரவியிருந்த சூழலில், அமித் ஷாவுடனான இந்த சந்திப்பு கூடுதல் அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

அண்ணாமலை–அமித் ஷா சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமை, வரவிருக்கும் தேர்தல் தயாரிப்பு, பாஜக அமைப்பு பலப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டிடிவி தினகரனை மீண்டும் பாஜக அணிக்கு கொண்டு வருவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என்ற அரசியல் வட்டாரங்களின் ஊகங்களும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் பாஜக அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், இந்த டெல்லி சந்திப்பு பல்வேறு கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுக்கும் என மதிப்பிடப்படுகிறது.

Exit mobile version