திருச்சிராப்பள்ளியின் கல்விப் பாரம்பரியத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள ஜமால் முகமது கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் ஒரு பகுதியாக, இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU) சார்பில் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்களுக்கான பூப்பந்து போட்டிகள் மிக விமரிசையாகத் தொடங்கப்பட்டுள்ளன. பாரதிதாசன் பல்கலைக்கழகமும், ஜமால் முகமது கல்லூரியும் இணைந்து நடத்தும் இப்போட்டிகள் கடந்த 14-01-2026 அன்று தொடங்கி 17-01-2026 வரை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேசிய அளவிலான விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்களும், பயிற்சியாளர்களும் திருச்சியில் குவிந்துள்ளனர்.
இந்தச் சிறப்புமிக்க விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 15-01-2026 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் முறைப்படி தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரி மைதானத்திற்கு வருகை தந்த துணை முதலமைச்சருக்குத் தேசிய மாணவர் படையினர் (NCC) அணிவகுப்பு நடத்திச் சிறப்பு மரியாதை அளித்தனர். அந்த மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், பூப்பந்து விளையாட்டைத் விளையாடித் தொடங்கி வைத்தார். விழாவிற்குத் தலைமை வகித்த ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் முனைவர் து.இ. ஜார்ஜ் அமலரெத்தினம் வரவேற்புரையாற்றினார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசிய துணை முதலமைச்சர், தமிழகம் விளையாட்டுத்துறையின் தலைநகராக மாறி வருவதைச் சுட்டிக்காட்டினார்.
இவ்விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். மேலும், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு (IAS), விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேகநாத் ரெட்டி (IAS) ஆகியோர் கலந்து கொண்டனர். ஜமால் முகமது கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது பிலால், செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் ஏ.கே. காஜா நஜீமுத்தீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ மற்றும் அருண் நேரு, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று வீரர்களை வாழ்த்தினர். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் முனைவர் ஆர். சக்திகிருஷ்ணன், முனைவர் வி. ராஜேஷ் கண்ணன், பதிவாளர் பேராசிரியர் ஆர். கலிதாசன் மற்றும் அமைப்புக் குழுவினர் இப்போட்டிகளின் தொழில்நுட்பக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். ஜமால் முகமது கல்லூரியின் விளையாட்டுத் துறை இயக்குனர் முனைவர் B.S. ஷாயின்ஷா இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார்.
இந்தத் தேசிய அளவிலான தொடரில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் பஞ்சாப், ஹரியானா, பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், உத்தர பிரதேஷ், மணிப்பூர், டெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 113 பல்கலைக்கழக அணிகள் களமிறங்கியுள்ளன. போட்டிகள் நாக் அவுட் (Knock-out) மற்றும் லீக் (League) முறைகளில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அகில இந்திய அளவில் பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும் இந்தத் தொடர் ஒரு சிறந்த பாலமாக அமைந்துள்ளது எனப் கல்வியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.













