சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இடையிலான ஆலோசனைகள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.
முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் முதலமைச்சரை சந்தித்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதலமைச்சரை சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வரும் 2ஆம் தேதி மது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். இந்த நடைப்பயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வைகோ கூறுகையில், “போதைப்பொருள், குறிப்பாக கஞ்சா பயன்பாட்டை எதிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த சமத்துவ நடைப்பயணம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க 950 பேரை நேர்காணல் மூலம் தேர்வு செய்துள்ளோம். கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள். நடைப்பயணம் திருச்சியிலிருந்து தொடங்க உள்ளது,” என்றார்.
மேலும், தொடக்க நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை, தொல். திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாத வகையில், கட்டுப்பாடும் ஒழுங்கும் காக்கப்பட்டு நடைப்பயணம் நடத்தப்படும் என்றும் வைகோ உறுதி அளித்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்றும், திமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைமையுடன் கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மாநிலத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

















