தமிழக அரசியலில் குறிப்பாக தென் மாவட்ட திமுகவில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள், மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தாலும், தங்களை இன்னமும் திமுக விசுவாசிகளாகவே கருதும் அழகிரி ஆதரவாளர்கள், தற்போது கட்சித் தலைமையுடன் சமரசமாகப் போகும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது, மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் சார்பாகத் தயாரிக்கப்பட்ட கூட்டு மன்னிப்புக் கடிதம் ஒன்றை மன்னன் முதல்வரிடம் வழங்கியதாகத் தெரிகிறது. அந்த அறிக்கையில், தாங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றுக்கட்சிக்கும் செல்லவில்லை என்றும், திமுகவின் கொள்கை பிடிப்போடு விசுவாசிகளாகவே வாழ்ந்து வருவதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர். “எங்களை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொண்டு, கட்சிப் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும்” என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பி.எம். மன்னன், “திமுகவில் எங்களை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி முதல்வரிடம் கடிதம் அளித்துள்ளோம். வரும் தேர்தலுக்கு முன்பாகக் கட்சித் தலைமை இது குறித்து ஒரு நல்ல முடிவை அறிவிக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். எங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு அண்ணன் மு.க. அழகிரி அவர்கள் தடையாக இருக்க மாட்டார்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் திமுகவின் தேர்தல் பணிகளை வலுப்படுத்த இவர்களின் வருகை உதவும் என்று ஒரு தரப்பினர் கருதினாலும், பழைய கசப்புகளை மறந்து தலைமை இவர்களை ஏற்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
ஏற்கனவே ‘அமைதிப் படை’யாகச் செயல்பட்டு வரும் அழகிரி ஆதரவாளர்கள், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது, தென் மண்டல அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வருடன் நடந்த இந்த ரகசியச் சந்திப்பு மற்றும் மன்னிப்புக் கடித விவகாரம் குறித்து திமுக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், தலைமையின் ‘க்ரீன் சிக்னல்’ (Green Signal) கிடைக்குமா என்பதை அறிய உடன்பிறப்புகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
