ஆகாஷ் தீப்பின் அரைசதம் ஒளிர, ஓவலில் இந்திய அணி வலிமையான பதிலடி !

லண்டன் : ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய துடுப்பாளர் ஆகாஷ் தீப் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் அரைசதத்தை பதிவு செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இந்தத் தொடரின் இறுதி போட்டி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்கள் மட்டுமே குவித்தது. அதற்கு பதிலாக இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்து சிறிய முன்னிலை பெற்றது.

இந்த பின்னணியில், 2வது இன்னிங்சை இந்தியா தொடங்கியபோது ஆரம்ப துடுப்பாளர்கள் கே.எல்.ராகுல் (7), சாய் சுதர்சன் (11) ஆகியோர் விரைவில் வெளியேறி அணியை சற்றே பதட்டத்தில் ஆழ்த்தினர். இதையடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்ட ஆகாஷ் தீப், 2வது நாள் முடிவில் ஜெய்ஸ்வால் (51) உடன் களத்தில் நிலைத்திருந்தார்.

மூன்றாவது நாளின் ஆட்டத்தை தொடங்கிய இருவரும், சிறப்பான துடுப்பாட்டம் மூலம் இந்திய அணிக்கு வலுவூட்டினர். ஆகாஷ் தீப், 66 ரன்கள் எடுத்துப் பந்துவீச்சாளராக மட்டுமல்ல, துடுப்பாளராகவும் தனித்தன்மையை நிரூபித்தார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து சதத்தைக் நோக்கி விளையாடி வருகிறார். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

உணவு இடைவேளைக்குள் இந்தியா 3 விக்கெட்டிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. போட்டியின் தற்போதைய நிலவரம், இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கிறது.

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா, தனது அணிக்கு ஆதரவு தெரிவிக்க ஓவல் மைதானத்திற்கு நேரில் வந்ததும், ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version