சுகாதாரத் துறையில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டதா அதிமுகவின் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சுகாதாரத் துறை, அகில இந்திய அளவில் நான்காம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஏழாவது இடத்திற்குச் சரிந்திருப்பதாக அ.தி.மு.க.வின் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சரிவுக்கு தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  மதுரையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அளித்த பேட்டியில், மதுரை எய்ம்ஸ் பணிகள் மற்றும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் முழுமை அடைவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழுத்தம் தான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், டாக்டர் பா. சரவணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தரவரிசைப் பின்னடைவு: “இந்தியாவில் 4-ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு சுகாதாரத் துறை தற்போது 7-வது இடத்திற்குச் சென்று விட்டது.” நிர்வாகச் சீர்கேடு: கடந்த ஆண்டு மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்தபோது, தமிழ்நாட்டில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லை, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற பல்வேறு காரணங்களைக் காட்டி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு உங்கள் நிர்வாகச் சீர்கேடு தானே காரணம்? மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் மத்திய அரசு அறிவித்த 6,850 மருத்துவ இடங்களில், தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட 350 இடங்களும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒரு இடம் கூட இல்லாமல், அத்தனையும் தனியார் கல்லூரிகளுக்குத் தான் கிடைத்துள்ளது.

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்து, 1,450 மருத்துவ இடங்களைப் பெற்றுத் தந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமரை அழைத்து அடிக்கல் நாட்டப்பட்டு, அன்றைக்கே 224 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, பூர்வாங்கப் பணிக்காக 18 கோடி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 35,000 மருத்துவக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது அரசு மருத்துவமனைகளில் 24,000 மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், தற்போது 12,000 மருத்துவர்கள் தான் உள்ளனர். அதாவது பாதியளவு பணியிடங்கள் காலியாக உள்ளன.

“திமுக அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வருவோம் என்று கூறியது. ஆனால், அதில் ஒரு கல்லூரியையாவது கொண்டு வர முடிந்ததா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சுகாதாரத் துறையைச் சீர்கெட்ட துறையாக மாற்றிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், எடப்பாடியாரைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது என்று டாக்டர் பா. சரவணன் தனது அறிக்கையை முடித்துள்ளார்.

Exit mobile version