அதிமுகவில் உள்கட்டமைப்பு மாற்றங்கள் தீவிரமாகும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சேலத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டு, ஒழுங்கு மீறல் நடந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கும் ஒற்றுமைக்கும் களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன் இன்று முதல் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். கழக உறுப்பினர்கள் இவருடன் எந்தவித தொடர்பும் கொள்ளக்கூடாது” என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதமே அவரிடம் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியில், செங்கோட்டையன் ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து மாலை அணிவித்ததும், மூவரும் ஒரே காரில் பயணம் செய்ததும், பின்னர் சசிகலாவை சந்தித்ததும் அதிமுக தலைமையகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, “கட்சிக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுப்போம். செங்கோட்டையனை நீக்க எந்த தயக்கமும் இல்லை” என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆலோசனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது கோபிச்செட்டிபாளையம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள செங்கோட்டையன், நீக்கப்பட்டுள்ளதால் இனி அதிமுக சார்பில் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அவர் சுயேச்சையாக நிற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1977ஆம் ஆண்டு முதன்முதலில் சத்தியமங்கலத்தில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவுடன் இணைந்த முக்கிய மூத்த தலைவராக இருந்து வந்தார். அவரின் நீக்கம் கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
			















