அதிமுக உள்கட்டமைப்பில் இன்று முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கி, அவரது பதவியில் முன்னாள் அமைச்சர் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.
செங்கோட்டையன், நேற்று (5ம் தேதி) செய்தியாளர் சந்திப்பில், “அதிமுகவில் இருந்து பிரிந்துச் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்; அடுத்த 10 நாளுக்குள் அந்தப் பணியை தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இன்று அவர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த ஏ.கே. செல்வராஜ் ?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஏ.கே. செல்வராஜ், தனது இளம் வயதிலிருந்தே அதிமுகவில் செயல்பட்டு வருபவர். 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட அன்றைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார்.
அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வீட்டு நகர்ப்புற மற்றும் வசதித் துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 2014ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஜெயலலிதா அவரை மீண்டும் முன்னிறுத்தி மாநிலங்களவை உறுப்பினராக்கினார்.
2021ம் ஆண்டு மீண்டும் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.கே. செல்வராஜ், அதிமுக கூட்டமைப்பின் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு, ஜெயலலிதாவால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஏ.கே. செல்வராஜ், இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று உள்ளார்