விண்வெளியில் விவசாயம் : வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தும் இந்திய வீரர் சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஒரு விஞ்ஞானியாக மட்டுமின்றி, விவசாயியாகவும் மாறி அசத்தி வருகிறார். அவர் அங்கு வெந்தயம் மற்றும் பச்சைப்பயறு நாற்று வளர்த்து புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் ‘ஆக்சியம் மிஷன் 4’ திட்டத்தில் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

விண்வெளி நிலையத்தில் இருந்து, சுக்லா பச்சைப்பயறு மற்றும் வெந்தய விதைகளை பெட்ரி டிஷ்களில் முளைக்க வைத்து, அதில் நிகழும் மாற்றங்களை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். நுண் ஈர்ப்பு விசை விதை முளைப்பு மற்றும் தாவர வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வை தார்வாட் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஹோசமணி மற்றும் தார்வாட் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சுதீர் சித்தபுரெட்டி ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஆக்ஸியம் ஸ்பேஸின் தலைமை விஞ்ஞானி லூசி லோவுடனான உரையாடலில் சுக்லா கூறியதாவது:

“இஸ்ரோ மற்றும் இந்தியாவின் பல தேசிய நிறுவனங்களுடன் இணைந்து, நான் மேற்கொண்டு வரும் விஞ்ஞானப் பரிசோதனைகள் பலருக்கும் பயனளிக்கக்கூடியவையாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.”

விண்வெளிப் பயணம் முடிந்து பூமிக்கு திரும்பிய பிறகு, பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட விதைகள் பல தலைமுறைகளாக பயிரிடப்படும் திட்டம் உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் மூலம், மரபியல், நுண்ணுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்து பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆராயப்படும்.

மேலும், மற்றொரு பரிசோதனையில், சுக்லா நுண்ணுயிரிகளை சேமித்து வைத்து, அவை உணவு, ஆக்ஸிஜன் மற்றும் உயிரி எரிபொருட்களை உருவாக்கும் திறன் கொண்டதா என்பதை ஆராயும் பணியும் நடைபெற்றுவருகிறது.

Exit mobile version