“ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானத்தைத் தூக்கியெறிந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்துள்ள தலைவர் விஜய்தான் தமிழகத்தின் எதிர்காலம்” என்று த.வெ.க நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்திற்குப் பிறகு சுமார் 81 நாட்கள் கழித்துத் தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தை ஈரோட்டில் இன்று தொடங்கினார் த.வெ.க தலைவர் விஜய். இதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், அங்கிருந்து கார் மூலம் பெருந்துறை – விஜயமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்மையில் அ.தி.மு.க-விலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த செங்கோட்டையன், இன்றைய கூட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தனது சட்டைப் பையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம், காலில் த.வெ.க கரை வேட்டியுடன் அவர் மேடையில் தோன்றியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. மேடையில் உரையாற்றிய செங்கோட்டையன் கூறியதாவது: “உலக வரலாற்றில் மக்கள் பணியாற்றத் தனது பெரும் வருமானத்தை விட்டுவிட்டு வந்த தலைவர்கள் மிகக் குறைவு. நான் முதலில் புரட்சித் தலைவரை (எம்.ஜி.ஆர்) பார்த்தேன், இன்று புரட்சித் தளபதி விஜயைக் காண்கிறேன்.” “தமிழகத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய் மட்டும்தான். இது வெறும் கூட்டமல்ல, மக்களுக்குத் தீர்ப்பு அளிக்கப்போகும் கூட்டம்.” “வருகின்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரைக் காட்டுகிறாரோ, அவர்தான் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவார்.”
த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “அண்ணன் செங்கோட்டையன் த.வெ.க-விற்கு வந்த பிறகு புனித ஜார்ஜ் கோட்டை நமக்கு உறுதியாகிவிட்டது. தற்போதைய ஆட்சியின் ஊழலால் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். டாஸ்மாக் நிர்வாகத்தை மட்டுமே கவனிக்கும் இந்த ஆட்சியை மாற்றத் தலைவர் விஜயால் மட்டுமே முடியும்,” எனக் காட்டமாகத் தெரிவித்தார். இந்த மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக சுமார் 1,797 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். த.வெ.க-வின் இந்த ஈரோடு பயணம், தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
