புதுடில்லி : ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர், காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு டில்லி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காம் ஏர் நிறுவனத்தின் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலின் ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சுமார் 94 நிமிடப் பயணத்திற்கு பின் டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில், யாரும் கவனிக்காமல் நுழைந்த சிறுவன், தடைசெய்யப்பட்ட பகுதியிலிருந்து புறப்பட்டு லேண்டிங் கியரில் ஒளிந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமானம் தரையிறங்கியபோது அதிகாரிகள் அந்த சிறுவனை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். வட ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ் நகரத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்ட அந்த சிறுவன், “ஆர்வத்தால் இப்படிச் செய்தேன்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விமான நிலைய ஊழியர்கள் அவரை உடனடியாக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் (CISF) ஒப்படைத்தனர். பின்னர், மதியம் 12.30 மணிக்கு டில்லியில் இருந்து புறப்பட்ட அதே விமானத்தில் அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சிறுவன் என்பதால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், இந்தச் சம்பவம் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்த கடும் கேள்விகளை எழுப்பி இருப்பதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
