மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிகளை மகப்பேறு மருத்துவத்தில் புகுத்தும் நோக்கில், மதுரையில் தேசிய அளவிலான குழந்தையின்மை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற ‘டாபிசார் 2026’ (TAPISAR – 2026) மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதுரை பாப்பீஸ் ஹோட்டல் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டை இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நல சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI), அதன் குழந்தையின்மை கமிட்டி மற்றும் எம்காட் (MCOT) ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்தன.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், மதுரை குரு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், எம்காட் தலைவருமான டாக்டர் பி. கல்பனா வரவேற்புரை ஆற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ‘டாபிசார்’ தலைவர் டாக்டர் சரத் பாட்டினா தலைமை தாங்கிய இந்த நிகழ்வில், இந்திய மலட்டுத்தன்மை சிகிச்சை சங்கத்தின் (ISAR) செயலாளர் டாக்டர் ஆஷா பக்சி மற்றும் நிறுவனர் டாக்டர் சஞ்சீவ ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்து, தற்போதைய சூழலில் கருவுறுதல் சார்ந்து நிலவும் சவால்கள் குறித்து உரையாற்றினர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை மாநகர் போக்குவரத்து பிரிவு துணை ஆணையாளர் எஸ். வனிதா, சமூக மாற்றங்களில் மருத்துவர்களின் பங்களிப்பு மற்றும் பெண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வின் அவசியம் பற்றிச் சிறப்பான உரையை வழங்கினார்.
இந்த மாநாட்டில் தென் தமிழகத்தின் முன்னணி குழந்தையின்மை சிகிச்சை நிபுணரான டாக்டர் பி. கல்பனா, ‘மலட்டுத்தன்மை மற்றும் அதன் நவீன தீர்வுகள்’ என்ற தலைப்பில் விரிவான மருத்துவக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். அவரைத் தொடர்ந்து, பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். ஜி. பாலமுருகன் பங்கேற்று, ‘புற்றுநோய் பாதிப்பும் கருவுற்றலும்’ (Onco-fertility) என்ற மிக முக்கியமான தலைப்பில் பேசினார். புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னும் எவ்வாறு குழந்தைப்பேற்றை உறுதி செய்ய முடியும் என்பது குறித்த அவரின் மருத்துவ விளக்கங்கள் மாநாட்டில் பங்கேற்ற மருத்துவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, குழந்தையின்மை சிகிச்சையில் புகுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் லேப்ராஸ்கோபி போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகள் இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக அமைந்தன.
மாநாட்டில் ‘டாபிசார்’ செயலாளர் டாக்டர் ராதா வெம்பூ மருத்துவத் துறையின் புதிய பரிமாணங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நாடு முழுவதிலுமிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவப் பேச்சாளர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், இத்துறையில் நீண்டகாலமாகச் சிறப்பாகப் பணியாற்றி வரும் மருத்துவ அறிஞர்களுக்கு கௌரவ விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிறைவாக, எம்காட் செயலாளர் டாக்டர் சாந்தா தேவி நன்றியுரை ஆற்றினார். மதுரையில் நடைபெற்ற இந்தத் தேசிய மாநாடு, தென் தமிழக மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.













