அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடி ராஜ்ஜியம் ஒடுக்கப்படும் – இபிஎஸ் உறுதி

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் முற்றிலும் ஒடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கலில் உள்ள தனியார் விடுதியில், மாவட்டத்தின் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

அவர்களது கோரிக்கைகளை கேட்ட பின் பேசிய இபிஎஸ்,

“கோரிக்கைகளை மனுவாக அளிக்கவும். எதிர்காலத்தில் சாத்தியமான அனைத்தையும் செய்து தருகிறோம்.

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நினைக்க முடியாத பல சலுகைகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் பல ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டன. மீதமுள்ள இடங்கள் அடுத்த அதிமுக ஆட்சியில் தூர்வாரப்படும்.

திண்டுக்கல் விவசாயிகள் கோரிய மஞ்சள் ஆறு தூர்வாரும் பணியும் மேற்கொள்ளப்படும்.

வன்னிய கிறிஸ்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படுவது குறித்து அரசு அமைந்தவுடன் பரிசீலிக்கப்படும்.

தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முன்வைத்த மின்சாரம், வரி உயர்வு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுடன் பேசி தீர்வு காணப்படும்” எனக் கூறினார்.

அவர் மேலும், “அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் ரவுடி கலாச்சாரம் ஒடுக்கப்பட்டது. பல ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்றனர். ஆனால் தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. ரவுடிகள் ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தாக்குதல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் முற்றிலும் ஒடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

Exit mobile version