கோவை ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி விழாவினை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் ஒரு ஆன்மிகப் புரட்சியாக நடைபெற்று வருகிறது. மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வர இயலாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே ஆதியோகியைத் தரிசனம் செய்வதற்காகவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. அந்த வகையில், வேலூர் மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் இந்த ரத யாத்திரை நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா மையத்தில் இன்று (19/01/2026) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் பேசிய வேலூர் ஒருங்கிணைப்பாளர் R.வெங்கடசுப்பு, தமிழகத்தின் பாரம்பரிய ஆதீனங்களான பேரூர், சிரவை, தருமபுரம் மற்றும் தொண்டை மண்டல ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்களின் அருளாசியோடு இந்த ரதங்கள் நான்கு திசைகளிலும் பயணத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, இந்த ஆண்டு ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுவது ஒரு சிறப்பம்சமாகும். வேலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதிகளில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்களைத் தரிசித்தபடி இந்த ரதம் பயணித்து வருகிறது. வேலூர் மாநகரில் கருகம்பத்தூர் முதல் காட்பாடி வரை பல்வேறு இடங்களுக்குச் செல்லும் இந்த ரதம், பின்னர் குடியாத்தம் வழியாக ஜனவரி 25-ல் காஞ்சிபுரத்தையும், ஜனவரி 29-ல் திருவண்ணாமலையையும் சென்றடைய உள்ளது.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 7 அடி உயர ஆதியோகி திருவுருவச் சிலையுடன் கூடிய 4 ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில் சுமார் 30,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து, 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் வரும் ரதத்திற்குச் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மலர்கள் மற்றும் தீபாராதனைகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா வேலூரில் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தண்டபாணி முதலியார் மஹாலில் நேரலை செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் ‘சிவ யாத்திரை’ எனும் பாதயாத்திரையாக 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய தேருடன் அடியார்கள் கோவைக்கு வருகை தர உள்ளதும் இந்த ஆன்மிகப் பயணத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.














