“குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்த நடிகை ஆண்ட்ரியா” – பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்…!

சென்னை: நடிகர் கவின் நடிப்பில், அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்க்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தில், ஆண்ட்ரியா கதாநாயகியாகவும், ருஹானி சர்மா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். வெற்றிமாறனின் மேற்பார்வையில் தயாரான இப்படம், வெளியான நாளிலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களைச் சந்தித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திரைப்படத்தைப் பற்றியும், அதில் தயாரிப்பாளராக செயல்பட்ட ஆண்ட்ரியாவின் முயற்சியையும் குறித்து நடிகர் கவின் பகிர்ந்த தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஆண்ட்ரியா தற்போது வசிக்கும் வீட்டையே அடமானம் வைத்து இந்தப் படத்திற்கு முதலீடு செய்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். படத்திற்கு கிடைக்கும் ஆதரவைப் பார்த்தால், ஆண்ட்ரியாவின் முயற்சி வீண் போகாது என்று நம்புவதாகவும் கவின் கூறியுள்ளார்.

‘மாஸ்க்’ புரமோஷன் நிகழ்வில் சில நாட்களுக்கு முன்பு பேசிய ஆண்ட்ரியா, ‘வட சென்னையில்’ நடித்த சந்திரா கதாபாத்திரத்திற்குப் பெரும் பாராட்டுகள் கிடைத்தாலும், அதற்குப் பிறகு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மனக்கசப்பை பகிர்ந்திருந்தார்.

இதற்கிடையில், வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தில் தானும் நடிக்க இருப்பதாக ஆண்ட்ரியா சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார். வடசென்னை யூனிவெர்ஸலும், தனுஷ் – சிம்பு இணையும் புதிய கோணத்தையும் எதிர்நோக்கும் நிலையில், ‘அரசன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உயர்ந்து வருகிறது.

Exit mobile version