போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று அமலாக்கத்துறையின் முன் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் இன்று விசாரணைக்கு வராமல் இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, அதிமுக நிர்வாகி பிரசாத், நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தும் போது, போதைப்பொருள் விற்பனை மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பு வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த தகவல்களின் அடிப்படையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆகியோர் ஜூன் 17 அன்று கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதாக வெளிப்பட்டது.
பின்னர், ஜூன் 23 அன்று ஸ்ரீகாந்தும், ஜூன் 27 அன்று கிருஷ்ணாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இருவரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கில் வெளிநாட்டு நபர்கள் தொடர்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை தொடங்கியது. அதன்படி, நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி இன்று ஸ்ரீகாந்த் ஆஜராக வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று வர முடியாது என்று தெரிவித்து, மாற்று தேதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் அமலாக்கத்துறை அவருக்கு புதிய தேதி வழங்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், நடிகர் கிருஷ்ணா நாளை ED விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் இன்று ஆஜராகாமல் மாற்று நாள் கேட்டுள்ள நிலையில், கிருஷ்ணா நாளை விசாரணைக்கு செல்வாரா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
