கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த விவசாயிகள், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் சார்ந்த தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஆட்சியரிடம் நேரடியாக முறையிட்டனர். குறிப்பாக, நொய்யல், கௌசிகா மற்றும் பவானி ஆகிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தென்னை நார் கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் பா.நாராயணன், ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் தேவந்திர குமார் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க, குறிப்பாகக் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நீர்நிலைப் பாதைகளில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், குளம் மற்றும் குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் அவற்றைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
கூட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) தயாரித்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் குறித்த சிறப்புக் கருத்துக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை ஆட்சியர் பார்வையிட்டுப் பாராட்டினார். இந்நிகழ்வில் முதுநிலை மண்டல மேலாளர் பழனிகுமார், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தமிழ்செல்வி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். விவசாயிகளின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
