சென்னை: அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியால் தமிழகத்தின் பல துறைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியிருப்பதால், தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் உள்ளதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தற்போதைய 25% வரிக்கு மேலாக 50% வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டின் தொழில்துறைகள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஜவுளித்துறையில் மட்டும் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஆடை, இயந்திரங்கள், ஆட்டோமொபைல் போன்ற துறைகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருவதாகவும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளை தாம் பாராட்டுவதாகவும், தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தமிழக அரசு முழுமையாக ஆதரிப்பதாகவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.