தமிழகத்தில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விபத்து இல்லாத பயணத்தை வலியுறுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை மண்டலம்) மற்றும் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆகியவை இணைந்து மிக நூதனமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை ஒருங்கிணைத்தன. இதன் முக்கிய நிகழ்வாக, மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனரும் சமூக ஆர்வலருமான டி.அறிவழகன், சாலை விதிகளின் அவசியத்தைப் பறைசாற்றும் நோக்குடன், நோபல் உலக சாதனை புத்தகத்தில் (Noble World Records) இடம் பெறும் இலக்கோடு ஒரு சவாலான சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்தச் சாதனைப் பயணத்தைக் காலை 10.20 மணியளவில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் க.சத்தியக்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பயணத்தில் அறிவழகன், 20 கிலோ எடையுள்ள சுமையைச் சுமந்தவாறு, ‘அரை வட்ட மிதிப்பு முறை’ (Half Pedal Cycle Method) எனப்படும் கடினமான முறையில் இடைவிடாமல் சைக்கிள் ஓட்டினார். மேட்டுப்பாளையத்திலிருந்து துடியலூரில் உள்ள கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையிலான 40 கிலோமீட்டர் தொலைவை, வெறும் 3 மணி 10 நிமிடங்களில் கடந்து அவர் தனது இலக்கை வெற்றிகரமாக எட்டினார்.
இந்தத் தொடக்க விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேட்டுப்பாளையம்–1 கிளை மேலாளர் மணிவண்ணன், சுபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ந.மகேஸ்வரன், அரிமா சங்க வட்டாரத் தலைவர் இ.பரமேஸ்வரன் மற்றும் சேர நாடு சமூக நல அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஏ.ஜாபர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வீரரை வாழ்த்தினர். மேலும், சமூக ஆர்வலர்கள் எம்.எச்.அமீர் முகமது, பி.ராமமூர்த்தி, ‘இமைகள்’ அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் எஸ்.லெனின் சக்கரவர்த்தி மற்றும் நீலகிரி மாவட்டத் தலைவர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மதியம் 1.30 மணியளவில் துடியலூர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.குமார் முன்னிலையில் நிறைவடைந்த இந்த நிகழ்வில், போக்குவரத்து கழகக் கோவை தலைமையக கிளை மேலாளர் எஸ்.வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர். இந்த அரிய உலக சாதனை முயற்சியை அங்கீகரித்து, நோபல் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர் ந.நரேந்திரன் அவர்கள், டி.அறிவழகனுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். ஒரு அரசுப் பேருந்து நடத்துனராகப் பணியாற்றும் அறிவழகன், தனது கடமையையும் தாண்டி பொதுநலனுக்காகவும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காகவும் இத்தகைய கடினமான சாதனையைச் செய்து முடித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவாக ஒருங்கிணைப்பாளர் டி.யுவராஜன் நன்றி உரை ஆற்றினார்.
