கொடைக்கானல் பைன் மரக் காட்டில் விபத்து

கொடைக்கானலின் பிரபல சுற்றுலாத் தலமான பைன் மரக் காடுகள் பகுதியில், ஏற்றமான சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈச்சர் வேன் ஒன்று பின்னோக்கி நகர்ந்து அருகிலிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்று பைன் மரக் காடுகள். இந்தச் சுற்றுலாத் தலத்திற்கான சாலை ஏற்றமாகக் காணப்படுவதால், வாகனங்கள் கடந்து செல்வது சற்றுக் கடினம்.

திண்டுக்கல் வடமதுரையில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வேன் ஒன்று பைன் மரக் காடுகளுக்கு வந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிட்ட ஓட்டுநர், ஏற்றமான சாலையில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். வாகனம் பின்னோக்கி நகராமல் இருக்க, ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இறங்கி டயருக்கு அடியில் கல்லை வைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஈச்சர் வேன் பின்புறமாக வேகமாக நகரத் தொடங்கியது. பின்நோக்கி நகர்ந்த வேன், வலது மற்றும் இடது பக்கங்களில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்தியது.

இந்த விபத்தில், டெம்போ, எர்டிகா கார், ஸ்கோடா கார் உள்ளிட்ட வாகனங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன. இறுதியாக, அந்த வேன் எடியோஸ் கார் மீது மோதி நின்றது. எடியோஸ் கார் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதமடைந்தது. மோதிய வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லாததாலும், வாகனம் நகர்ந்த போது சாலையில் சுற்றுலாப் பயணிகள் யாரும் நடமாடாததாலும், அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக பைன் மரக் காடு சுற்றுலாத் தலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பாகவும் காணப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வாகனங்களை நிறுத்துவதற்கும், பாதுகாப்பிற்கும் உரிய நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தச் சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் வாகனத்தைச் செலுத்த வேண்டும் என வனத்துறையும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version