தமிழ் மாதங்களில் ஆன்மிகத் துறையில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஆடி மாதம், அம்மன் மாதமாக கொண்டாடப்படுகிறது. இதில் நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆடிப்பெருக்கு திருநாள், இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 (ஞாயிறு) அன்று நடைபெறுகிறது.
ஏன் 18ம் தேதி முக்கியம்?
ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தின் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த 18 என்ற எண்ணுக்கு தமிழர் பண்பாட்டிலும், ஆன்மிகத்திலும் தனி சிறப்பு உண்டு.
பகவத் கீதையின் 18 அதிகாரங்கள், மகாபாரதப் போர் நடந்த 18 நாட்கள், தமிழ் இலக்கிய நூல்கள் 18 எனப் பல சிறப்புகள் இதில் அடங்கி உள்ளன. இதனால் இந்த நாளில் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் பலமடங்கு வெற்றியை தரும் என நம்பப்படுகிறது.
நீருக்கான நன்றியாக ஆடிப்பெருக்கு
பண்டைய காலங்களில் விவசாயம் மழை மற்றும் ஆறு நீரை சார்ந்திருந்ததால், நீர் நிலைகளுக்கும், காவிரி போன்ற ஆறுகளுக்கும் நன்றி கூறும் நாளாக இந்த திருவிழா முக்கியத்துவம் பெற்றது. பெருகும் ஆறு, நம் வாழ்க்கையும் செழிக்கச் செய்யும் என நம்பப்படுகிறது.
ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறை
பக்தர்கள் ஆற்றங்கரைக்கு சென்று, இலைகளில் உணவுப் படையல் வைத்து, தீபம், தூபம் காட்டி வழிபடுவர்.
புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை ஆற்றில் விடுவார்கள், வாழ்க்கையில் வளம் பெருக வேண்டி.
திருமணமான பெண்கள் மூத்த சுமங்கலிகள் அல்லது கணவர்கள் மூலமாக தாலிச்சரடு மாற்றிக் கொள்வது வழக்கம்.
ஆறு அருகில் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள தண்ணீர் வாடிகளில் குங்குமம், சந்தனம் வைத்து வழிபடுவர்.
வீட்டில் வழிபடும் முறை
ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து அதில் மஞ்சள், பூ சேர்த்து வழிபாட்டு அறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபடலாம்.
வெற்றிலை, பாக்கு, இனிப்பு வகைகள் வைத்து படைத்தல் செய்யலாம்.
காவிரி, கங்கை போன்ற நதிகளை மனதில் நினைத்து, தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வேண்டிக் கொள்வது வழக்கம்.
2025 ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு நேரம்
வழிபாட்டு நேரம்: காலை 6.00 – 9.00 மணி மற்றும் 11.00 – 12.00 மணி வரை.
நவமி திதி: காலை 9.45 வரை.
தாலிச்சரடு மாற்றம்: காலை 11.00 – 12.00 மணி சிறந்த நேரம் என கூறப்படுகிறது.
தாலிச்சரடு மாற்றும் முறை
பெண்கள் காலை குளித்து, பழைய தாலிக்கயிற்றை கழுவி, புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தை கோர்த்து, அம்பாளின் படியில் வைத்து வழிபட வேண்டும்.
பின்னர் மூத்த சுமங்கலிகள் அல்லது கணவர் கைகளால் அணிந்து கொள்ளலாம்.
இது தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தரும் என நம்பப்படுகிறது.