ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் வருடாந்திர ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த ஜூலை 19-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவின் நான்காம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த அம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் அறாம் நாளான நாளை (வியாழக்கிழமை), ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், பிறகு பகல் 2 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்காக எழுந்தருளவுள்ளார்.
இதனை தொடர்ந்து, ராமேசுவரம் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வழக்கமாக கோவில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு மூடப்படும்; பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் மூடப்படும். ஆனால், ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரிக்காக வரவுள்ள நிலையில், கோவில் பகல் முழுவதும் திறந்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவின் ஏழாம் நாளான மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாளான ஜூலை 27-ம் தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டம், பன்னிரண்டாம் நாளான ஜூலை 29-ம் தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, ஜூலை 30-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறவிருக்கின்றன.
திருவிழா இறுதியாக ஆகஸ்ட் 4-ம் தேதி சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.