தேனி மாவட்டம் கம்பத்தில் பிரியாணி கடை ஒன்றில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மெயின் ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி வங்கிக்கு எதிரே இயங்கி வரும் ஒரு பிரியாணி கடைக்கு, நேற்று முன்தினம் மாலை ராயப்பன்பட்டி வைரவன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சத்யமூர்த்தி (26), தனது நண்பர்களான ஆதேஷ் (21) மற்றும் கபில்தேவ் (41) ஆகியோருடன் சாப்பிடச் சென்றிருந்தார். அதே நேரத்தில், கம்பம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த முகிலன் (25) மற்றும் சிபி சூர்யா (24) ஆகிய இருவரும் உணவகத்திற்குள் நுழைந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகச் சத்யமூர்த்தியின் காலில் இவர்கள் இடறியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சிறு விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே உணவகத்திற்குள்ளேயே கடும் வாக்குவாதம் வெடித்தது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்த சத்யமூர்த்தி கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த முகிலனும் சிபி சூர்யாவும், அருகில் இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடையிலிருந்து கூர்மையான கத்தியை எடுத்து வந்து, சத்யமூர்த்தியைச் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவரது மார்புப் பகுதியில் பலத்த குத்து விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சத்யமூர்த்தி நிலைகுலைந்து கீழே சரிந்தார். இதனைத் தடுக்க முயன்ற அவரது நண்பர் ஆதேஷுக்கும் கத்திக்குத்து விழுந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சத்யமூர்த்தியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்த கம்பம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பியோட முயன்ற முகிலன் மற்றும் சிபி சூர்யாவை நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர்கள் அந்தப் பகுதியில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் கம்பம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சத்யமூர்த்தியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்கக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
