கோவை சரவணம்பட்டி அடுத்த சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில், போலி நகையை அடகு வைக்க முயன்ற பெண்ணை அடகுக்கடை உரிமையாளரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன மேட்டுப்பாளையம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் ‘சிவசெல்வி’ என்ற பெயரில் கடந்த 9 மாதங்களாக அடகுக்கடை நடத்தி வருபவர் ராஜாராம் (51). இவரது கடைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி (45) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். கடந்த 9-ம் தேதி சுமதி மூன்று முறை போலி நகைகளை அடகு வைத்து ராஜாராமிடம் பணம் பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் கடைக்கு வந்த சுமதி, 12 கிராம் எடையுள்ள போலி நகையைக் கொடுத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அந்த நகையைப் பரிசோதித்த ராஜாராம், அது போலி என்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்து சுமதியைத் தாக்கியுள்ளார். மேலும், தனது நண்பரான மகேந்திரனுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். மகேந்திரன் மற்றும் அவரது ஐந்து நண்பர்கள் அங்கு வந்து, சுமதியை அடகுக்கடைக்கு பின்புறம் உள்ள ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த வீட்டிற்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சுமதியைக் கட்டி வைத்து அனைவரும் சேர்ந்து கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். நிலைமை மோசமானதைக் கண்ட ராஜாராம், உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த மருத்துவக் குழுவினர் சுமதியைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ராஜாராம் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சுமதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணை அடித்துக் கொலை செய்த புகாரின் பேரில், அடகுக்கடை உரிமையாளர் ராஜாராம், அவரது நண்பர் மகேந்திரன் மற்றும் உடன் இருந்த மற்ற நண்பர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நகை மோசடி நடந்திருந்தால் காவல் துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டிய நிலையில், தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
