பண்ணைப்புரம் அருகே குடிநோயாளி கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மகன் கைது

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில், மதுபோதையில் தொடர்ந்து குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் மகனாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லவராயன்பட்டி அழகர் மலையான் தெருவைச் சேர்ந்த தர்மர் (57), மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இவரது மனைவி சந்திரா (54) கம்மங்கூழ் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், இவர்களது மகன் அஜித் (27) பெற்றோருடன் வசித்து வந்தார். தர்மர் தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டின் அமைதியைக் கெடுப்பதோடு, சந்திரா மற்றும் அஜித்தை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தர்மர் சபரிமலைக்குச் செல்ல மாலை அணிந்து விரதம் இருந்துள்ளார். விரதக் காலத்தில் ஓரளவு அமைதியாக இருந்தவர், சபரிமலை யாத்திரை முடிந்து வீடு திரும்பிய இரண்டு நாட்களிலேயே மீண்டும் மது அரக்கனின் பிடியில் சிக்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்த தர்மர், வழக்கம் போல் தனது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்துள்ளார். நீண்டகாலமாகப் பொறுமை காத்து வந்த சந்திராவும், மகனும் தர்மரின் அத்துமீறலால் எல்லையற்ற ஆத்திரமடைந்தனர். ஆத்திரத்தில் விவேகத்தை இழந்த இருவரும், வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து தர்மரை சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தர்மர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கணவர்/தந்தை என்றும் பாராமல் செய்த இந்தக் கொலையினால் அதிர்ச்சியடைந்த தாயும் மகனும், செய்வதறியாது சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தர்மர் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கோம்பை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தர்மரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோம்பை போலீசார், தர்மரின் மனைவி சந்திரா மற்றும் மகன் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். “மதுவால் ஒரு குடும்பமே சிதைந்துவிட்டதே” என அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Exit mobile version