மதுரை திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி நடைபெறும் போராட்டங்கள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை நீடிப்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் தங்களது வீடுகள் தோறும் தீபங்களை ஏற்றி நூதன முறையில் வழிபாட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக, பழநி ஆண்டவர் கோயில் தெரு, கீழத்தெரு, திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று மாலை ஒரே நேரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதால் ஒட்டுமொத்தப் பகுதியே ஒளிவெள்ளத்தில் காட்சியளித்தது.
சமீபத்தில் சந்தனக்கூடு திருவிழாவிற்காக மலைப்பாதையில் உள்ள கல்லத்தி மரத்தில் கொடியேற்ற ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தீபம் ஏற்றச் சென்ற இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்களுக்குப் போலீசார் தடை விதித்தனர். இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்து இரவு விடுவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே, நேற்று மாலை 6:30 மணியளவில் தங்களது வீடுகளின் வாசலில் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ மற்றும் ‘உச்சி மலையில் தீபம் ஏற்ற வேண்டும்’ போன்ற வாசகங்களைக் கோலப்பொடியால் எழுதி, அதன் மீது நூற்றுக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றிப் பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இந்த வழிபாட்டுப் போராட்டத்தில் பெரியவர்கள் மட்டுமன்றிச் சிறுவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாடினர். வீடுகள் தோறும் முருகன் உருவம் பொறித்த மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, ஒரு ஆன்மீக எழுச்சியாகவே இந்தப் போராட்டம் உருவெடுத்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறிய அரசு நிர்வாகத்தையும், காவல்துறையையும் கண்டித்துத் திரளான பெண்கள் இதில் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் வரை தங்களது அறப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனப் பகுதி மக்கள் அறிவித்துள்ளதால், அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

















