ஜவுளிக்கடையில் மேற்கூரையை உடைத்து நூதன கொள்ளை – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள ஜவுளிக்கடையில், மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணம் மற்றும் புத்தாடை மூட்டைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனி சாலை, முருக பவனம் பகுதியைச் சேர்ந்த சகாயமேரி என்பவர் அதே பகுதியில் சிறிய ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, விற்பனைக்காகப் புதிய சேலைகள், சுடிதார் மற்றும் ரெடிமேட் ஆடைகளை அதிக அளவில் கொள்முதல் செய்து வைத்திருந்தார்.

கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் மேல் பகுதியில் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையின் கல்லாவில் இருந்த ரூ. 45,000 ரொக்கம் மற்றும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெடிமேட் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

சகாயமேரி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் மேற்கு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது முக்கியத் தடயங்கள் சிக்கின: கொள்ளையர்கள் ஒரு இண்டிகா காரில் வந்து கடைக்கு முன்பு நிறுத்தியுள்ளனர். காரில் வந்த நபர்கள் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் ஆடைகளைத் திருடிக்கொண்டு, மீண்டும் காரிலேயே ஏறித் தப்பிச் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பண்டிகைக் காலத்தில் சிறுகச் சிறுகச் சேமித்து, விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த துணிகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றது ஜவுளிக்கடை உரிமையாளரைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து, கொள்ளையர்களைப் பிடிக்கப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு திண்டுக்கல் கடைவீதி பகுதிகளில் இரவு நேரப் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version